கடலூரில் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு தடை

குடியரசு தினத்தன்று கடலூரில் விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணிக்கு தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-01-21 20:08 GMT
கோப்புப்படம்
கடலூர், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கடலூரிலும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியுடன் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முன்பை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் கூடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடியரசு தினத்தன்று கடலூரில் விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கிடையாது.

மீறி டிராக்டர் பேரணி நடத்தினால், மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். மேலும் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்