கரூரில், இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

கரூரில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தில் 700-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-01-21 22:30 GMT
கரூரில் 32-வது சாலை பாதுகாப்பு விழாவையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
கரூர்:

கரூரில் மாவட்ட போக்குவரத்துத்துறையின் சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நேற்று பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  700-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு பகவலன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா ஆகியோர் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டினர்.

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் தாந்தோணிமலை, சுங்ககேட் பகுதி வழியாக சென்று கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவரும் தலைக்கவசம், முககவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டினார்கள். மேலும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தேர்வு நடத்தப்பட்டு அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே உரிமம் வழங்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த முயற்சி தடைபட்டது. மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படும். சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை அனைவரும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, தமிழ்நாடு அரசு கரூர் மண்டல போக்குவரத்து மேலாளர் குணசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்