கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

எருமப்பட்டி அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-01-21 22:30 GMT
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 51). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள் (40). கனகராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை அடிக்கடி தாக்கி வந்து உள்ளார். 

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி கனகராஜ், தனது மனைவி கன்னியம்மாளை கடப்பாரை கம்பியால் தாக்கி, கொலை செய்ய முயன்றார். இதை தடுக்க வந்த கன்னியம்மாளின் தந்தை வெள்ளையச்சாமி என்பவரையும் தாக்கினார்.

இது தொடர்பாக கன்னியம்மாள் எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நாமக்கல் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நாகராஜன் வாதாடினார்.

இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஸ்ரீவித்யா, குற்றம் சாட்டப்பட்ட கனகராஜிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கனகராஜ் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்