விழுப்புரம் கோர்ட்டில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஆஜா்

இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

Update: 2021-01-21 16:37 GMT
விழுப்புரம்:

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மதுபாட்டில் கடத்திய காரை விடுவிப்பதற்காக விழுப்புரம் அருகே உள்ள செய்யத்துவிண்ணான்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அப்போதைய இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகிய இருவரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகிய இருவரையும் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்ததோடு அவர்கள் இருவர் மீதும் குற்ற வழக்கு தொடர அப்போதைய விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சுமித்சரண் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

கோவை போலீஸ் கமிஷனர் சாட்சியம்

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட அப்போதைய டி.ஐ.ஜி. சுமித்சரண், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்த சுமித்சரண் தற்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்