கண்மாய்க்கு தண்ணீர் திறக்க அனுமதித்ததால் திருப்பரங்குன்றம் ஒன்றிய ஆணையாளர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார் - கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
கண்மாய்க்கு தண்ணீர் திறக்க அனுமதித்ததால் திருப்பரங்குன்றம் ஒன்றிய ஆணையாளர் ஆசிக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். இதனை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கொம்பாடி கிராமத்திற்கு மேல கண்மாயில் இருந்து தண்ணீர் திறக்க திருப்பரங்குன்றம் ஒன்றிய ஆணையாளர் ஆசிக் பரிந்துரை கடிதம் கொடுத்தார். அவரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை கண்டித்த கலெக்டர் அன்பழகன் ஆசிக்கை காத்திருப்பு பட்டியலில் வைத்தார். இதனையறிந்த கொம்பாடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தி தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தனர்.
இது குறித்து கொம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டத்தில் கொம்பாடி கிராமத்தில் உள்ள கீழக் கண்மாய், மேல கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க கோரி பலமுறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், தொழில்நுட்ப அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று நெடுமதுரை கண்மாய்க்கு கீழ் உள்ள 6 கண்மாய்களில் இருந்து ஆயக்கட்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீர் வரத்து பாதிக்காதவாறு கொம்பாடி கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
மேலும் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் வரும்போது கொம்பாடி கண்மாயில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்க வருவாய் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கால்வாயில் உபரி நீரை பொது மக்களின் குடிநீர் தேவைக்காக பகிர்ந்து கொடுக்க நெடுமதுரை கொம்பாடியைச் சேர்ந்த பொதுமக்கள் எவ்வித சட்ட, ஒழுங்கு பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது. அனைத்து கண்மாய் ஷட்டர்கள் இருக்கும் இடத்தில் பொதுப்பணித் துறை ஊழியர்களை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இரு கிராம மக்களும் அதனை ஏற்றுக்கொணடனர்.
இந்த நிலையில் அனைத்து கண்மாய்களும் நிறைந்து மறுகால் செல்லும் போது கொம்பாடி கண்மாய்கள் இன்னும் நிறைய வில்லை. இதற்கு தண்ணீர் திறந்து விடும்படி பொதுமக்கள் சார்பில் திருப்பரங்குன்றம் ஆணையாளர் ஆசிக்கிடம் மனு அளித்தோம். அவர் கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம் அளித்தார். அதற்காக திருப்பரங்குன்றம் ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை ஆசிக்கை கலெக்டர் காத்திருப்போர் பட்டியலில் வைப்பதாக அறிவித்துள்ளார்.
பொது மக்கள் தேவைக்காக தண்ணீர் திறந்து விடும்படி பரிந்துரை செய்த ஒன்றிய ஆணையாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்ட கலெக்டரை கண்டித்தும், தண்ணீர் திறக்க கோரியும் கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க உள்ளோம். மேலும் இது தொடர்பாக கலெக்டர் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.