மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்
பேரையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பேரையூர்,
பேரையூர் தாலுகா பகுதியில் கடந்த ஆவணி மாதம் மானாவாரி விவசாயத்தில் பாசி, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, கம்பு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் பாசி, உளுந்து செடிகள் கருகின. மேலும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த மழையால் பருத்தியும், கம்பு பயிரும் சேதம் அடைந்தன.
மேலும் அவ்வப்போது பெய்த பனியாலும், ஈரப்பதத்தாலும், வெங்காய செடிகள் வளர்ச்சி இல்லாமல் சுருங்கி அழுகிப் போனது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள கதிர்கள் சாரல் மழையால் முளைக்கத் தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் பெய்த சாரல் மழையால் 200 ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகள் அழுகிய நெற்கதிர்களையும், மழையால் முளைத்த மக்காச்சோள கதிர்களையும் கொண்டு வந்து, சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பேரையூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துணை தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் காசிமாயன், செல்லத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சேடபட்டி ஒன்றிய செயலாளர் ராஜா சங்கர், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.