வேளாண் சட்ட விவகாரத்தில் பா.ஜனதா வீண் பிடிவாதம் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வேளாண் சட்ட விவகாரத்தில் பா.ஜனதா வீண் பிடிவாதம் பிடிப்பதாக காரைக்குடியில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

Update: 2021-01-21 14:34 GMT
காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை மேற்கு வட்டாரத்திற்குட்பட்ட அமராவதிபுதூர், அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சங்கராபுரம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டம் காரைக்குடியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா வரவேற்றார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். இன்று மத்திய அரசு பல்வேறு நிலைகளில் அவசர முடிவுகளை எடுத்து வருகிறது. உதாரணமாக கொரோனா காலக்கட்டத்தில் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தியது.

இந்த காலக்கட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு பிரதமர் நரேந்திரமோடி கொரோனா காரணமாக எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர். இதுதவிர ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள், தொழில் புரிவோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

சிங்கப்பூர் நாட்டில் கூட கொரோனா காலத்தில் 5 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து அந்நாட்டு பிரதமர் அதன் பின்னர் ஊரடங்கை அறிவித்தார். அதன் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் இந்திய பிரதமரோ எடுத்தோம், கவிழ்த்தோம் என்பதை அனைத்து நடவடிக்கையிலும் செய்து வருகிறார். அதற்கு மற்றொரு உதாரணம் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி சட்டம் ஆகும். பண மதிப்பிழப்பு குறித்து பிரதமர் பொருளாதார அறிஞர்களை கலந்து ஆலோசனை செய்யாமல் நள்ளிரவு அறிவிப்பு செய்ததால் பல்வேறு சிறு, குறு தொழில்கள் முடங்கி போனது. அவற்றில் இருந்து இதுநாள் வரை தொழிலாளர்கள் மீள முடியவில்லை. இதேபோல் தான் ஜி.எஸ்.டி. சட்டமும் அமலில் உள்ளது.

இதுதவிர தற்போது மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா சட்டம். இந்த சட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்காமலே சட்டத்தை இயற்றி உள்ளனர். தற்போது 56 நாட்கள் வரை இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து மத்திய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகின்றது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் வீண்பிடிவாதம் தான்.

தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட்டு வருகின்றனர். அதற்கு காரணமாக வேக்சின் என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தும் தாங்கள் தான் என பா.ஜ.க.வினர் தம்மட்டம் அடித்து வருகின்றனர். பா.ஜ.க. அடிக்கடி சொல்கிறது இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம் என்று. அப்படி ஒருபோதும் நடக்காது. இந்தியாவையும், காங்கிரசையும் எப்போதும் பிரிக்க முடியாது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. இல்லாத ஆட்சி தான் நடக்கிறது. அதற்கு உதாரணம் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள். அதேபோல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணியான அ.தி..மு.க இல்லாத ஆட்சிதான் அமையும்.

தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது திராவிட கட்சிகள் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது. தமிழகத்தில் இந்தி நுழைந்தால் தமிழ் மொழி அழியும். தமிழை நாம் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளோம். பா.ஜனதாவால் ஒருபோதும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது. அது நடக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த தமிழக மண் பல்வேறு அரசியல் தலைவர்களை கொண்டு வந்த மண். வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் நமது கூட்டணி கட்சியினர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்