சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் - புதிய மாணவ-மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு
சிவகங்கை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின.புதிதாக வந்த 100 மாணவ, மாணவிகளுக்கு சீனியர் மாணவ, மாணவிகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் அரசு சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் முதலாம் ஆண்டில் 100 மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த வகுப்புகள் தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மருத்துவகல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி சிவகங்கை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்த 36 மாணவர்கள் மற்றும் 64 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 100 பேர் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.
புதிய மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் டாக்டர் ரெத்தினவேல், துணை முதல்வர் டாக்டர் சர்மிளா, மருத்துவ கண்காணிப்பாளர் வைரவராஜ், மருத்துவ அலுவலர் டாக்டர் மீனா, மற்றும் துறை தலைவர்கள், சீனியர் மாணவ, மாணவிகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். புதிதாக கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பதாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வழிகாட்டுதலின்படி மாணவ,மாணவிகள் முககவசம் அணிந்து வந்தனர். இவர்கள் ஒரு அறைக்கு 20-ல் இருந்து 25 பேர் வீதம் அமர வைக்கப்படுவார்கள் என்று முதல்வர் டாக்டர் ரெத்தினவேல் தெரிவித்தார்.