வீட்டில் இருந்த வாகனத்திற்கு டோல்கேட்டில் பணம் வசூல் - உரிமையாளர் அதிர்ச்சி
வீட்டில் இருந்த வாகனத்திற்கு டோல்கேட்டில் பணம் வசூல் செய்யப்பட்டதால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமத்தில் வசித்து வருபவர் கமர் ரகுமான். இவர் சொந்தமாக 4 சக்கர வாகனம் வைத்துள்ளார். இவர் வீட்டில் ஒருவாரமாக தனது வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மதுரை - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடியில் இருந்து இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக குறுஞ்செய்தி தகவலாக வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர் இதுகுறித்து உடனடியாக ஆதாரத்துடன் சுங்கச்சாவடி சென்று முறையிட்டு உள்ளார். அதற்கு சுங்கச்சாவடி மேலாளர், இதற்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் பொறுப்பு இல்லை. அந்த பணம் எடுத்த நேரத்தில் உங்கள் வண்டி செல்லவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து வாகனத்தின் உரிமையாளர் கூறுகையில், இதேபோல வங்கிக் கணக்கில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப் படுகிறது. பணத்தையும் பறிகொடுத்துவிட்டு அதைப்பற்றி கேட்டாலும் அதற்கு தகுந்த பதில் வரவில்லை. எனவே இந்த சுங்கச்சாவடியை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் மானாமதுரை வாடகை கார் ஓட்டுனர்களும் இதே குற்றச்சாட்டை கூறுகின்றனர். ஒரே நேரத்தில் 3 முறை வசூல் செய்வதாகவும் புகார் கூறுகின்றனர்.