காது அறுந்த காட்டுயானை திடீர் சாவு: தீக்காயம் ஏற்படுத்திய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை; வனத்துறையினர் நடவடிக்கை
காது அறுந்த காட்டு யானை திடீரென்று இறந்த சம்பவத்தில் தீக்காயம் ஏற்படுத்திய மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
காட்டு யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளி மண்டலம்) மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றிவந்த சுமார் 40 வயதான ஆண் காட்டு யானையை வனத்துறையினர் நேற்று முன்தினம் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காட்டு யானை லாரியில் நின்றிருந்தவாறு பரிதாபமாக உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து காட்டு யானையின் உடலை வனத்துறையினர் அங்கிருந்து எடுத்து சென்று மன்றாடியார் என்ற இடத்தில் வைத்து நேற்று பிரேத பரிசோதனை செய்தனர். புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை டாக்டர்கள் சுகுமாரன், ராஜேஷ்குமார், பாரத் ஜோதி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
தனிப்படை அமைப்பு
அப்போது யானையின் முதுகில் இருந்த காயத்தால் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதித்துள்ளது தெரியவந்தது. மேலும் யானையின் காது அறுந்த நிலையில், தலை மற்றும் காது பகுதியில் பெட்ரோல் போன்ற திரவம் மூலம் தீக்காயங்கள் ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடலில் இருந்து அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி யானை உயிரிழந்தது தெரியவந்தது.இதனிடையே காட்டு யானை மீது பெட்ரோல் ஊற்றி தீக்காயம் ஏற்படுத்திய நபர்களை பிடிக்க வனத்துறையின் தனிப்படை அமைத்து துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தனிப்படையினர் மசினகுடி பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக சிலரை பிடித்து வைத்துள்ளனர்.
மசினகுடியில் அஞ்சலி
இதேபோல் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டுயானை உயிரிழந்த சம்பவத்தால் வனத்துறையினர் மட்டுமின்றி மசினகுடி பகுதி மக்களிடமும் சோகம் நிலவி வருகிறது. மேலும் மசினகுடி பஜாரில் போலீசார், வாகன டிரைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த காட்டு யானையின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மசனகுடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.