இறுதி பட்டியல் வெளியீடு; கோவை மாவட்டத்தில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி கோவையில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

Update: 2021-01-21 04:20 GMT
வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட போது எடுத்த படம்
வாக்காளர் பட்டியல்
தமிழகம் முழுவதும் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் பார்வையாளர் கருணாகரன், கலெக்டர் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு கோவை மாவட்டத்திற்கான இறுதி வரைவு வாக்காளர் பெயர் பட்டியலை வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்படி கோவை மாவட்டத்தில் 15, 09, 531 ஆண் வாக்காளர்கள், 15, 52, 799 பெண் வாக்களர்கள், 414 3-ம் பாலினத்தவர் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 43, 268 பேர் அதிகமாக உள்ளனர்.

1,27,562 பேர் புதிதாக சேர்ப்பு
ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து, 70 ஆயிரத்து 733 பேர் இருந்தனர். இதில் 1, 27, 562 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 18, 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 37, 667 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இறந்தவர்களின் 20, 802 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. 12, 305 பேர் இடமாறி உள்ளனர். இரு இடங்களில் பெயர் பதிவான 2, 444 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மொத்தம் 35, 551 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது
கடந்த தேர்தலின்போது மொத்தம் 3047 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 979 இடங்களில்தான் வாக்குச்சாவடிகள் அமைந்தன. தற்போது ஓராயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதால் இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மேலும் 1550 உயரும். புதிதாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா காலமென்பதால் வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வருதல், இதன் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்வது குறித்து தேர்தல் ஆணையம் உரிய ஆணை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பெயர்கள் சேர்க்கலாம்
தற்போது இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும் வேட்பாளர் மனு தாக்கலுக்கு முந்தைய நாள் வரை 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்வது தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது voters HelpLine app என்ற செயலி மூலம் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். வருகிற 25-ந்தேதி நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து கட்சியினர்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜேந்திரன், கணேசன், தி.மு.க. சார்பில் வக்கீல் விஜயராகவன், காங்கிரஸ் சார்பில் கார்த்திக், காந்தகுமார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தங்க வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் கிடைக்க வேண்டும் என்றும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் செய்திகள்