புதுக்கோட்டையில் அதிநவீன வசதிகளுடன் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட ராணியார் மகப்பேறு மருத்துவமனை; சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டையில் அதிநவீன வசதிகளுடன் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட ராணியார் மகப்பேறு மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
ராணியார் மகப்பேறு மருத்துவமனை
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட்ட போது, நகரின் மையப்பகுதியில் உள்ள ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை மருத்துவக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பலர் மகப்பேறு சிகிச்சையை பழமையான ராணியார் மருத்துவமனையிலே தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து ரூ.25 கோடியில் ராணியார் மகப்பேறு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டது. மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு ஒப்புயர்வு மையமாக மாற்றம் செய்யப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். வீட்டு வசதிவாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பிரசவத்திற்காக சிகிச்சையில் சேர்ந்த 2 கர்ப்பிணிகளிடம் நலம் விசாரித்து வாழ்த்தினார்.
சிகிச்சை வசதிகள்
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், ரத்தினசபாதி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், டீன் பூவதி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன் உள்பட மருத்துவ அதிகாரிகள், பொதுநல அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், ஜமாத்துகள் உள்பட பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ராணியார் மருத்துவமனையில் மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு, பிரசவ சிகிச்சைப் பிரிவு, ரத்த பரிசோதனை பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவு, பச்சிளங் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்த சேமிப்புப் பிரிவு,
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சேவை பிரிவு, பிறப்பு பதிவு மற்றும் பிறப்பு சான்று வழங்கும் அலவலகப் பிரிவு, குடிதண்ணீர், சுடுதண்ணீர் வசதி, லிப்ட் வசதி, அதிநவீன வென்டிலேட்டர் வசதியுடன் 108 வாகன வசதி அமையப் பெற்றுள்ளது. மேலும் பிரசவித்த தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் இலவசமாக மருத்துவ சிகிச்சை முடித்து வீடு செல்ல 102 வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் 24 மணிநேரமும் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
சென்னைக்கு இணையாக...
முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் முதன்முதலாக சென்னைக்கு இணையாக புதுக்கோட்டையில் பிரத்யேகமாக மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையத்தோடு உள்ளடக்கிய 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 126 இடங்களில் மகப்பேறு, மயக்கவியல், குழந்தைகள் நல மருத்துவர்கள் கொண்ட சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த மையங்களில் 53 லட்சத்து 32 ஆயிரம் பிரசவங்கள் நடந்து குழந்தைகள் பிறந்துள்ளனர். தமிழகத்தில் 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ்கிறது. தமிழகத்தில் 62 சதவீதத்திற்கு மேல் பிரசவங்கள் அரசு மருத்துவமனயைில் நடக்கிறது. மற்ற மாநிலங்களில் 30 சதவீதம் தான் அரசு மருத்துவமனையில் பிரசவம் நடக்கிறது. கொரோனா காலத்திலும் 6,460 கர்ப்பிணிகளுக்கும், கொரோனா தொற்று பாதித்த 70 ஆயிரம் பச்சிளங்குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முதல் இடம்
மகப்பேறில் தாய்-சேய் நலத்தில் இந்தியாவில் தமிழகம் தான் முதல் இடம். பிற மாநிலங்களில் பிரசவத்தில் தாய் இறப்பு விதம் 113 ஆக உள்ளது. தமிழகத்தில் 60 ஆக உள்ளது. குழந்தை இறப்பு விதம் இந்திய அளவில் 32 ஆக உள்ளது. தமிழகத்தில் 17-ல் இருந்து 15 ஆக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி மேலும் 5 லட்சத்து 8 ஆயிரம் வேக்சின் கூடுதலாக வந்துள்ளது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து திட்டமிட்டபடி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.