காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் 30 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் அரசை கண்டித்து புதுவையில் 30 தொகுதிகளிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-01-21 01:45 GMT
புதுச்சேரி, 

தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என கண்டித்து புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் நேற்று 30 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. மாறாக குப்பை, மின்சாரம், குடிநீர் உள்பட அனைத்திற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனை கூட சரி செய்யவில்லை. ரே‌‌ஷன்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த அரசு சுதேசி, பாரதி, ரோடியர் பஞ்சாலைகளை மூடியுள்ளது. மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில வளர்ச்சி நாளுக்கு நாள் பின்னுக்கு செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் ரத்தினவேல், லதா, ஜெயந்தி, மகளிர் அணி பொதுச்செயலாளர் கனகவல்லி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மணவெளி தொகுதி பா.ஜ.க. சார்பில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். இதில் தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், மாநில விவசாய அணி செயலாளர் சக்திபாலன், பொதுச்செயலாளர் சுகுமாரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர்.

காரைக்கால் மாவட்டம் நிரவி-திருபட்டினம் தொகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் நிரவி செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம், தேர்தல் பொறுப்பாளர் சிவபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெடுங்காடு தொகுதியில் மாவட்ட தலைவர் துரைசேனாதிபதி தலைமையிலும், காரைக்கால் மதகடியில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.கணபதி தலைமையிலும், காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகில் வடக்கு தொகுதி தலைவர் சுரேஷ் கண்ணா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வில்லியனூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் வில்லியனூர், மங்கலம் தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

திருபுவனை தொகுதி திருவண்டார்கோவில் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் கராத்தே முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். அணி நிர்வாகிகள் புகழேந்தி, ஆறுமுகம், பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் ஜெயமணி, கட்சி நிர்வாகிகள் தனசேகரன், வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாகூர் சிவன் கோவில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவராமன் வரவேற்றார். ஜெகதீசன், இளங்கோ, கருணாமூர்த்தி, சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் தங்க.விக்ரமன் கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் 30 தொகுதிகளிலும் பா.ஜ.க. சார்பில் காங்கிரஸ் அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்