இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் ‘தாண்டவ்’ தொடர் நடிகர்களிடம் விசாரிக்க முடிவு உத்தரபிரதேச போலீசார் மும்பை வந்தனர்

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய புகாரில் சிக்கிய ‘தாண்டவ் தொடர் நடிகர்கள் மற்றும் குழுவினரிடம் விசாரணை நடத்த உத்தரபிரதேச போலீசார் மும்பை வந்து உள்ளனர்.

Update: 2021-01-21 01:08 GMT
மும்பை, 

அமேசான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் தாண்டவ் என்ற இணையதள தொடர் வெளியானது. அரசியலை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில் 9 பாகங்கள் உள்ளன.

இதில் இந்தி நடிகர் சயீப் அலிகான், டிம்பிள் காபாடியா, முகமது சீசான் ஆயுப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர்.

இந்தநிலையில் தாண்டவ் தொடரில் இடம் பெற்ற காட்சிகள் இந்து கடவுளை அவமதிப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன.

இந்தநிலையில் தாண்டவ் இணையதள தொடர் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரபிரதேச மாநில போலீசார் 4 பேர் நேற்று மும்பை வந்து உள்ளனர். அந்த மாநிலத்தில் லக்னோ, நொய்டா, ஜாஷகான்பூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் தாண்டவ் இணையதள தொடருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உத்தரபிரதேச போலீசார் தாண்டவ் தொடர் குழுவினர், நடிகர்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக அவர்கள் விசாரணைக்கு உதவி கேட்டு தென்மும்பையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம், அந்தேரியில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகம் சென்றனர்.

அப்போது அவர்கள் "விசாரணை நடத்த எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்து கொண்டு இருக்கிறது. எனவே பிரச்சினை எதுவும் இல்லை" என்றனர்.

முன்னதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் சலாப்மானி திரிபாதி, தாண்டவ் படக்குழுவினர் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக பெரும்விலையை கொடுக்க வேண்டியது இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தாண்டவ் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தாண்டவ் தொடருக்கு எதிராக மராட்டியத்திலும் போலீசில் புகார்கள் வந்து உள்ளன. அந்த புகார்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஓ.டி.டி. தளங்களில் சாதி, மதங்களுக்கு எதிரான படங்கள், தொடர்கள் வெளியாகாமல் தடுக்க மத்திய அரசு அதை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல தாண்டவ் விவகாரம் குறித்து உத்தரபிரதேச போலீசார் மும்பை வந்துள்ளது குறித்து கேட்ட போது, மராட்டிய போலீசாரும் விசாரணை நடத்த வெளிமாநிலங்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று தான் என கூறினார்.

மேலும் செய்திகள்