திருவாரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 44,338 பேர் சேர்ப்பு; 9,324 பேர் நீக்கம்

திருவாரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 44,338 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 9,324 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2021-01-21 02:34 IST
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் 18 ஆயிரத்து 985 ஆண் வாக்காளர்கள், 25 ஆயிரத்து 318 பெண் வாக்காளர்கள், 35 திருநங்கைகள் என மொத்தம் 44 ஆயிரத்து 338 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் 4 ஆயிரத்து 793 ஆண்கள், 4 ஆயிரத்து 526 பெண்கள், 5 திருநங்கைகள் என மொத்தம் 9 ஆயிரத்து 324 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இணையதள முகவரி

இன்று (நேற்று) முதல் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம்-2021 தொடங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கடந்த ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பெயரை ேசர்த்து கொள்ளலாம். அதேபோல பெயர் நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அரசியல் கட்சி பிரமுகர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பூஷ்ணகுமார், உதவி கலெக்டர்கள் பாலசந்திரன், புண்ணியக்கோட்டி மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்