தென்காசியில் இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் சமீரன் வெளியிட்டார்

தென்காசியில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சமீரன் நேற்று வெளியிட்டார்.

Update: 2021-01-20 20:47 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று வெளியிட்டார். அதனை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மரகதநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருக செல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

13 லட்சம் வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியலில் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 739 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 30 ஆயிரத்து 195 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 5 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர். வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 227 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 101 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 39 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 367 வாக்காளர்கள் உள்ளனர். கடையநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 484 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 416 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி தொகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 974 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 48 ஆயிரத்து 532 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவரும் மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். ஆலங்குளம் தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 18 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலினத்தவரும் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 141 வாக்காளர்கள் உள்ளனர். 5 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 6 லட்சத்து 53 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 80 ஆயிரத்து 262 பெண் வாக்காளர்களும், 78 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13 லட்சத்து 33 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 1,504 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 740 இடங்களில் அமைந்துள்ளன.

இளைஞர்கள் ஆர்வம்

வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 16-11 -2020 அன்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12 லட்சத்து 91 ஆயிரத்து 681 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் 13 லட்சத்து 33 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள் நான்கு முறை நடத்தப்பட்டது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகளுக்காக 60 ஆயிரத்து 54 மனுக்கள் பெறப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட பட்டியலில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்