நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 41 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர்.

Update: 2021-01-20 22:30 GMT
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 41 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் 39,357 பேர் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 வரை பொதுமக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதோடு, நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கலெக்டர் மெகராஜ் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அதை பெற்றுக்கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர் கோட்டைக்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இது குறித்து கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 16.11.2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 14 லட்சத்து 25 ஆயிரத்து 883 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக 39 ஆயிரத்து 357 பேர் சேர்க்கப்பட்டும், 24039 பேர் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 7 லட்சத்து ஆயிரத்து 104 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 39 ஆயிரத்து 937 பெண் வாக்காளர்களும், 160 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 38 ஆயிரத்து 833 பேர் அதிகம் உள்ளனர்.

இந்த பட்டியல் தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்களின் எண்ணிக்கை 61,516 ஆகும். இதில் 31,115 இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து உள்ளனர். மீதம் உள்ள 30,401 நபர்கள் தங்கள் பெயரை www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலோ படிவம் - 6 சேர்க்கை விண்ணப்பங்களை அளித்து, வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 259, சேந்தமங்கலம் தொகுதியில் 283, நாமக்கல் தொகுதியில் 288, பரமத்தி வேலூர் தொகுதியில் 254, திருச்செங்கோடு தொகுதியில் 260 மற்றும் குமாரபாளையம் தொகுதியில் 279 என மொத்தம் 1,623 வாக்குச்சாவடிகள் உள்ளன.

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 6,770 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 7,035 பேரும், நாமக்கல் தொகுதியில் 7,213 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 5,601 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 5,675 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 7.063 பேரும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 6,361 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 4,959 பேரும், நாமக்கல் தொகுதியில் 3,759 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 3,712 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 2,999 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 2,249 பேரும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்