மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை - கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2021-01-20 17:42 GMT
கடலூர்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள முடிகண்டநல்லூரை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு சிதம்பரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவி, தனது பெற்றோருடன் விருத்தாசலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது மாணவி, அதே பகுதியில் உள்ள உறவினரின் தோட்டத்துக்கு சென்ற போது, அங்கு கூலி வேலைக்கு வந்திருந்த விருத்தாசலம் அடுத்த பூதாமூரை சேர்ந்த சீனுவாசன் மகன் செல்வக்குமார் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. செல்வக்குமார் திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதுபற்றி அறியாத மாணவி, செல்வக்குமாருடன் செல்போன் மூலம் பேசி பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த 13.9.2019 அன்று மாணவி, பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த செல்வக்குமார், மாணவியை கடத்தி சென்று, சிதம்பரம் பஸ் நிலையத்தின் பின்புறம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட செல்வக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மாநில அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் 30 நாட்களுக்குள் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கடலூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்