மீண்டும் வகுப்புகள் திறந்ததால் உற்சாகமாக பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மகிழ்ச்சி

மீண்டும் வகுப்புகள் திறந்ததால் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ-மாணவிகளை பார்த்து ஆசிரிய-ஆசிரியைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-01-20 17:14 GMT
ஈரோடு,

கொரோனா ஊரடங்கு காலத்தில் அடைக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டது. முதல் கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. இதையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்கள், அரசு நிதி உதவி பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என 403 பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் 10-ம் வகுப்பு மாணவிகள், 12-ம் வகுப்பு மாணவிகள் சீருடைகள் அணிந்து உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளனரா? என்ற சோதனைக்கு பின்னர் பள்ளிக்கூட வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே செல்லும்போதே உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. மாணவிகள் உள்ளே சென்றதும் கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் போதிய இடைவெளி விட்டு வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளை பார்த்து ஆசிரியைகள் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி கூறியதாவது:-

நீண்ட இடைவெளிக்கு பின்னர் எங்கள் மாணவிகளை பார்க்கும் மகிழ்ச்சி எங்களுக்கு இருப்பதுபோல, எங்களை பார்த்ததில் மாணவிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி இருப்பதை உணர்ந்து கொண்டோம். பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் உடனே வந்து விடலாம் என்று ஏராளமானவர்கள் தயாராக இருந்ததாக கூறினார்கள். காரணம், இவர்கள் யாரிடமும் ஸ்மார்ட் போன்கள் கிடையாது. வாட்ஸ்அப் வகுப்புகளில் கூட இணைய முடியாத சூழலில் இருந்தவர்கள். அவர்கள் இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்திருந்தனர். இன்னும் சிலர், ஆசிரியைகள் நேரில் கற்பிக்கும்போது பாடங்கள் நன்றாக புரியும்.

ஆனால் ஆன்லைனில் அத்தகையை புரிதல் இல்லை. எனவே எப்போது வகுப்பு தொடங்கும் என்று இருந்தோம் என்றார்கள். எங்கள் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பில் 157 மாணவிகள் 4 பிரிவுகளில் படித்தனர். தற்போது இடைவெளி தேவை என்று அதை 8 வகுப்புகளாக பிரித்து இருக்கிறோம். பிளஸ்-2 வில் 296 பேர் படிக்கிறார்கள். இவர்களுக்கு 14 வகுப்புகள் உருவாக்கி இருக்கிறோம். இதனால் ஒரு வகுப்பில் 25-க்கும் குறைவானவர்களே உட்கார முடியும். இருக்கைகளில் இடைவெளி கடைபிடிக்க குறியீடு போடப்பட்டு இருக்கிறது.

பள்ளிக்கூட வளாகத்தில் ஆங்காங்கே தானியங்கி சானிடைசர் கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. கைகழுவும் இடத்தில் சோப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இடைவேளையின்போதும் கைகழுவுவதை கட்டாயப்படுத்தி இருக்கிறோம். 10-ம் வகுப்பு மாணவிகள் இடைவேளை முடிந்து சென்ற பின்னர், பிளஸ்-2 மாணவிகள் வெளியே வரும்படி கால அட்டவணை போடப்பட்டு உள்ளது. மாலை வகுப்புகளும் நேர மாற்றத்துடன் முடிக்கப்படுகின்றன. முதல் நாளில் 60 சதவீதம் மாணவிகள் பள்ளிக்கூடம் வந்தனர். பள்ளிக்கு வருகை கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளிக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்தால் நிச்சயம் அனைத்து மாணவிகளும் விரைவில் முழுமையாக பள்ளிக்கூடத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு தலைமை ஆசிரியை சுகந்தி கூறினார்.

இதுபோல் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் பெற்று வர சில பள்ளிக்கூடங்களில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பள்ளிக்கு வந்த ஒவ்வொருவரையும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர். நேற்று மாணவ-மாணவிகளை விட ஆசிரிய-ஆசிரியைகள் தங்கள் மாணவ-மாணவிகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்