கொடைக்கானல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி வழக்கில் பெண்கள் உள்பட 7 பேர் விடுதலை - திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பு

கொடைக்கானல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2021-01-20 15:52 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை அடுத்த பொய்யாவெளியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு கடந்த 19.4.2008 அன்று மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கு அவர்கள், சுற்றிவளைத்தனர். அப்போது சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில், மாவோயிஸ்டுகள் தரப்பில் நவீன்பிரசாத் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் 2 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் தப்பி விட்டனர். அங்கிருந்து ஏ.கே.47 ரகத்தை சேர்ந்த 17 துப்பாக்கிகள், சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆயுத பயிற்சி மேற்கொண்டது தொடர்பாக மாவோயிஸ்டுகள் மீது 16 சட்டப்பிரிவுகளின் கீழ், கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள மலைக்கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை மூளைச்சலவை செய்து மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்ததோடு, பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டது தெரியவந்தது.

இதனால் தப்பியோடிய 7 மாவோயிஸ்டுகளையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து தப்பியோடிய கண்ணன், ரஞ்சித், நீலமேகம், காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி, ரீனாஜாய்ஸ்மேரி ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதில் ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். மற்ற 5 பேரும் சிறையில் இருந்தனர்.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொண்ட வழக்கு, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது 300 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட 210 பொருட்கள் மற்றும் 33 ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கில் தமிழக முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் அதிகாரிகள், 16 அதிரடிப்படை போலீசார், 4 கிராம நிர்வாக அலுவலர்கள், டாக்டர் உள்பட மொத்தம் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இதனால் அதிகாரிகள் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு நேரில் வந்து சாட்சியம் அளித்தனர். சுமார் 1½ ஆண்டுகளுக்கு மேலாக சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் மனோகரன், எதிர்தரப்பில் வக்கீல் கண்ணப்பன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி ஜாமீனில் வெளியே இருக்கும் ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஆஜராகினர்.

இதேபோல் வேலூர் சிறையில் இருந்த ரீனாஜாய்ஸ்மேரியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அதேநேரம் திருச்சி சிறையில் இருந்த பகத்சிங், காளிதாஸ் மற்றும் மதுரை சிறையில் இருந்த கண்ணன், செண்பகவல்லி ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி ஜமுனா, மாலை 3 மணிக்கு வழக்கில் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்