விவசாயி கொலை : சாத்தூர் கோர்ட்டில் 3 பேர் சரண்
விவசாயி கொலை வழக்கில் தொடர்புைடய 3 பேர் சாத்தூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
சாத்தூர்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 52). விவசாயி.
இந்நிலையில் ஊரில் பொங்கல் தினத்தன்று வாருகாலில் தண்ணீர் செல்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஒரு பெண்ணிற்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார், வள்ளிநாயகத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர், இந்த பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் பெயர் விவரங்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் வள்ளிநாயகம் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையே நேற்று சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி சண்முகவேல் ராஜா முன்பு 3 பேர் சரண் அடைந்தனர். அவர்கள் வள்ளிநாயகம் கொலை தொடர்பாக சரண் அடைந்திருப்பதாக தெரியவந்தது.
செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 22), மலர்மன்னன் (22), பிரவீன்குமார் (19) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. அந்த 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.