வேப்பந்தட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம்: விவசாயி வீட்டில் 16 பவுன் நகை-ரூ.65 ஆயிரம் திருட்டு - மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து மர்மநபர்கள் கைவரிசை
வேப்பந்தட்டை அருகே பட்டப்பகலில், மறைத்து வைத்திருந்த சாவியின் மூலம் கதவை திறந்து விவசாயி வீட்டில் 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கலியமூர்த்தி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கலியமூர்த்தி வீட்டை பூட்டிவிட்டு அருகிலேயே சாவியை மறைத்து வைத்துவிட்டு சென்றதும், பீரோவின் சாவியையும் பீரோ மேலேயே வைத்திருந்ததும், இதனை அறிந்த மர்ம நபர்கள் சாவிவை எடுத்து வீட்டின் பூட்டை திறந்து வீட்டிற்குள் சென்று பீரோவின் மேலே இருந்த சாவியின் மூலம் பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.