கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-20 12:02 GMT
வந்தவாசி

வந்தவாசியை அடுத்த நம்பேடு கிராமத்தில் 100 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய விவசாய நிலத்துக்கு அருகில் இடம் வாங்கியவர்கள், அதில் கல்குவாரி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையறிந்த கிராம மக்கள் வந்தவாசி தாசில்தார் அலுவலகம் முன்பு அருணாச்சலம் என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கல்குவாரி, விவசாய நிலத்துக்கு அருகாமையில் வந்தால் எங்களால் விவசாயம் செய்ய முடியாது. விளை நிலம் பாதிக்கப்படும். இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர். 

விவசாய நிலம் அருகில் சமூக காப்புக்காடு உள்ளதால் அங்குள்ள மான், மயில் எனப் பல்வேறு வன உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

கல்குவாரியில் வெடி வைத்துத் தகர்க்கும் பணி நடந்தால் வீடுகள் விரிசல் ஏற்படும். இதுகுறித்து நாங்கள், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாய நிலத்துக்கு அருகில் கல்குவாரி அமைக்க அரசு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிராம மக்கள், தாசில்தார் திருநாவுக்கரசுவிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்