282 பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவ- மாணவிகள் - ஆசிரியரை பாடம் நடத்தச்சொல்லி கவனித்த கலெக்டர்
வேலூர் மாவட்டத்தில் 282 பள்ளிகள் திறக்கப்பட்டது. 10, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்;
வேலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. பள்ளிகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற முன் ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உற்சாகத்துடன் வந்தனர். சில மாணவ- மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டனர். வெகு நாட்களுக்கு பிறகு பள்ளியில் சக தோழன், தோழிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ-மாணவிகளின் உடல் வெப்ப அளவு தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டு பின்னர் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முககவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
வகுப்பறையில் மாணவ- மாணவிகள் இடைவெளியுடன் ஒரு பெஞ்சில் 2 பேர் அமர வைக்கப்பட்டனர். இதற்காக சில பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வந்திருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 282 பள்ளிகளில் 20 ஆயிரத்து 661 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பும், 15 ஆயிரத்து 15 மாணவ- மாணவிகள் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் நேற்று 12-ம் வகுப்பில் 80 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 75 சதவீதம் பேரும் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.
இப்பள்ளியில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவ-மாணவிகள் வருகை குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு முககவசம் மற்றும் கிருமி நாசினி வழங்க வேண்டும். சமூக இடைவெளியுடன் மாணவ-மாணவிகளுக்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மற்றும் கழிப்பறை வசதிகள், தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கொரோனா தடுப்பு காலத்தில் பாதுகாப்பாகவும், மதிய உணவு இடைவேளையின் போது சமூக இடைவெளி கடைப்பிடித்து, பழக வேண்டும். நல்ல முறையில் படித்து எதிர்காலத்தில் தலை சிறந்த நபர்களாக வரவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
முன்னதாக ஆய்வின் போது ஆசிரியர் ஒருவரை பாடம் நடத்துமாறு கூறினார். அதனை ஏற்று ஆசிரியர் பாடம் நடத்தினார். கலெக்டர் சண்முகசுந்தரம் வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைப் கவனித்தார்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, தாசில்தார் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.