சித்தூர் அருகே, காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர் - வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் ஆத்திரம்

சித்தூர் அருகே காதல்திருமணம் செய்த மனைவிக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர், காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலைசெய்ய முயன்றார்.

Update: 2021-01-20 09:51 GMT
சித்தூர்,

சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலம் தூர் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கும், பூதலபட்டு மண்டலம் சிந்த மாகுளபள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்களுக்கு தெரியாமல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அலைபாயுதே சினிமா பாணியில் அவர்கள் எதுவும் நடக்காதது போன்று அவரவர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது அவர்களுடைய பெற்றோர்களுக்கு கடந்த வாரம் தெரியவந்தது. இதனால் அவர்களுடைய பெற்றோர்கள் பூதலபட்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் காதல் தம்பதியினர் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து வாலிபருக்கு திருமண வயது ஆகாததால் அவர்கள் இருவருக்கும் போலீசார் கவுன்சிலிங் வழங்கி அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு அவர்களுடைய பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் தனக்கு கிடைக்காதவள், வேறுயாருக்கும் கிடைக்கக்கூடாது என நினைத்து அவரை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நேற்றுமுன்தினம் மதியம் 12 மணியளவில் தூர் பள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில் தனது காதல் மனைவியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். அப்போது அந்த வழியாக விவசாய நிலத்திற்கு சென்ற காதல் மனைவியை, கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் ஆங்காங்கே கத்தியால் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்