வையம்பட்டி அருகே பாலியல் ஆசைக்கு உடன்பட மறுப்பு: சிறுமியை கொல்ல முயன்ற வாலிபர் கைது
மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் ஆசைக்கு உடன்பட மறுத்ததால் சிறுமியை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வையம்பட்டி,
வையம்பட்டியை அடுத்த அணியாப்பூர் அருகே நேற்று முன்தினம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது சிறுமி சத்தம் போடவே, அங்கிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதை அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மற்றொருவர் பார்த்து பொதுமக்களுக்கு தகவல் கொடுத்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். பின்னர் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அவர், சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்ததாகவும், நேற்று முன்தினம் செல்போனில் படத்தை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாகவும், எனது ஆசைக்கு உடன்பட மறுத்து சத்தம்போட்டதால் சிறுமியின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றேன் என்றும் போலீசில் சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் மீது, சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க முயன்றது, கொலை செய்ய முயன்றது மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவில் மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.