ஆவியூர் கிராமத்தில் கோஷ்டி மோதல் எதிரொலி: அதிரடிப்படை போலீசார் கலவர தடுப்பு ஒத்திகை
ஆவியூர் கிராமத்தில் நடந்த கோஷ்டி மோதலை தொடர்ந்து அங்கு ஆயுதப்படை போலீசாரின் கலவரதடுப்பு ஒத்திகை நடைபெற்றது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரை அடுத்த ஆவியூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கோஷ்டி மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்வங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல் ஹக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் உத்தரவின் பேரில் ஆவியூர் கிராமத்தில் கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி, தாசில்தார் சிவசங்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் சிலர் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பிக்கொண்டு அவர்களை உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்குவதும், இதை போலீசார் தடுத்ததையும் தத்ரூமாக நிகழ்த்திக் காட்டினர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை போலீசாருடன் உள்ளூர் போலீசார் இணைந்து கலவர தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடலூர்-திருக்கோவிலூர் சாலையில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி குறித்து போலீசார் கூறுகையில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு சம்பவம் நடைபெற்றாலும் உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அமைதியை ஏற்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு செயலில் யாராவது ஈடுபட்டாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
முன்னதாக கலவர தடுப்பு ஒத்திகைக்காக 100 போலீசார் திடீரென வந்து இறங்கியதால் ஆவியூர் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.