மதுரையில் துணிகரம்: ஓய்வுபெற்ற துணை தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை - பணம் கொள்ளை - துப்பாக்கியையும் திருடிச் சென்றனர்
மதுரையில் ஓய்வு பெற்ற துணை தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை பை-பாஸ் ரோடு துரைச்சாமி நகர், ஷாலினி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 60). ஓய்வு பெற்ற துணை தாசில்தார். பொங்கல் பண்டிகையையொட்டி ராஜபாளையத்தில் உள்ள தனது சம்பந்தி வீட்டிற்கு குடும்பத்தினருடன் ரவிச்சந்திரன் சென்றார். அங்கு 3 நாட்கள் இருந்து விட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோக்களில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன.
மேலும் பீேராவில் இருந்த 65 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகள், 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது தவிர வீட்டின் மேல் பகுதியில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பழனிக்குமார் வந்து விசாரணை நடத்தினார். கை ரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இது தவிர, அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. மதுரையில் ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.