டி.கல்லுப்பட்டி அருகே, மழையால் சேதமடைந்த மக்காச்சோள பயிர் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
டி.கல்லுப்பட்டி அருகே மழையால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி, ரெங்கபாளையம், குன்னத்தூர், கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த ஆவணி மாதம் சுமார் 1000 ஏக்கரில் மானாவாரி பயிராக மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டது. மக்காச்சோள செடிகள் நன்றாக வளர்ந்து கதிர்கள் முளைக்க துவங்கிய உடன் ஒரு சில இடங்களில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டது. விவசாயிகள் அதற்குரிய மருந்தை தெளித்து மக்காச்சோள பயிரை ஓரளவுக்கு காப்பாற்றி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மக்காச்சோள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தபோது கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் மக்காச்சோள கதிரில் மழைநீர் இறங்கி மக்காச்சோள பயிர்கள் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் டி.கல்லுப்பட்டி வேளாண்மை அலுவலகத்தில் முறையிட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதில் இருந்து ஓரளவு மீண்டு வளர்ந்து வந்த மக்காச்சோள கதிர்கள் தற்போது பெய்த மழையால் முளைத்து சேதமடைந்துள்ளது. இதனால் இந்த வருடம் டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோள விவசாயத்தில் பலத்த நஷ்டம் அடைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.