பிளாஸ்டிக் கழிவுகளால் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலா? மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
“பிளாஸ்டிக் கழிவுகளால் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதா?” என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
மன்னார் வளைகுடா பகுதியை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அதற்கான வழிமுறைகளை வருகிற 2027-ம் ஆண்டு வரை பின்பற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் ஏராளமான அரிய வகை மீன்கள், கடல் பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகள் நிறைந்து காணப்படுகின்றன.
இப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், தேவையற்ற பழைய மீன்பிடி வலைகளை கடலில் வீசிவிட்டு வருகின்றனர். இதனால் கடல் மாசடைகிறது. கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
சுமார் 60 முதல் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் இந்த கடலில் கிடக்கின்றன. எனவே மன்னார் வளைகுடா கடலில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், மீன்பிடி வலைகளை அகற்றி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த மனு குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.