ஆலங்காயம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது - மகளை திருமணம் செய்துவைக்க வற்புறுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம்

ஆலங்காயம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மகளை திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-01-19 14:44 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). கோயம்புத்தூரில் ஆட்கள் வைத்து டைல்ஸ் பதிக்கும் வேலைசெய்து வந்தார். கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த நாகராஜ் கொலைசெய்யப்பட்டு, உடலை கோணிப்பையில் கட்டி, வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் வெள்ளக்குட்டை அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசப்பட்டு கிடந்தார்.

கடந்த 16-ந் தேதி வெள்ளக்குட்டை கிராமத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க சென்றவர்கள் கிணற்றில் கோணிப்பையில் ஏதோ மிதப்பதை பார்த்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு பழனிச்செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று கிணற்றில் கிடந்த கோணிப்பையை மீட்டு பார்த்தபோது அதில் வாலிபர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அவருடைய உடலில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து கொலைசெய்யப்பட்டவர் நாகராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜை, அதே கிராமத்தை சேர்ந்த அவருடைய கள்ளக்காதலி கோகிலா என்பவர் கொலைசெய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கோகிலாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து கோகிலா கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

கொலைசெய்யப்பட்ட நாகராஜின் ஊரான பெத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கோகிலா (35). இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கோகிலாவுக்கும், நாகராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி கோகிலா வீட்டுக்கு நாகராஜ் சென்றுவந்துள்ளார். கடந்த 14-ந் தேதி பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த நாகராஜ் கோகிலா வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது கோகிலாவின் 19 வயது மகளை, தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறு செய்துள்ளார். அதற்கு கோகிலா மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியே சென்ற நாகராஜ், அன்று இரவு மீண்டும் கோகிலா வீட்டுக்கு குடிபோதையில் சென்று கோகிலாவிடம் தகராறு செய்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார்.

அவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகிலா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டின் வெளியே இருந்த பாறாங்கல்லை தூக்கி வந்து நாகராஜ் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் கொலையை மறைப்பதற்காக தன்னுடன் தொடர்பு வைத்துள்ள மற்றொரு நபரான வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவரை வரவழைத்து, நாகராஜ் உடலை கோணிப்பையில் வைத்து, மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று வெள்ளகுட்டை அருகே மராட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் வீசி உள்ளனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கொலைக்கு பயன்படுத்திய பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்