பாக்கம்பாளையம், சேர்பாடி கிராமங்களில் காளை விடும் திருவிழா - மாடுகள் முட்டி 39 பேர் காயம்

அணைக்கட்டு அருகே பாக்கம்பாளையம், சேர்பாடி கிராமங்களில் நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 39 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-01-19 14:31 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த சேர்பாடி கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உறுதிமொழியை வாசித்து காளைவிடும் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ், வெங்கடேசன், விழா குழுவைச் சேர்ந்த லட்சுமணன், ரமேஷ், சுப்பிரமணி மற்றும் கிராம மக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். உதவி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவிழாவில் 313 காளைகள் களம் இறக்கப்பட்டன. காளைகளை அணைக்கட்டு கால்நடை மருத்துவர் கமலஹாசன் மற்றும் உதவியாளர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து, அடையாள அட்டை வழங்கினர்.

காளைகள் ஓடும் வீதியில் தேங்காய் நார் போடப்பட்டு இருந்தது. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் தேங்காய்நாரால் வழுக்கி விழுந்ததில் 4 காளைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காளைகள் முட்டி 13 பேர் காயம் அடைந்தனர். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் காளை விடும் திருவிழாவை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போட்டியில் பங்கேற்று வேகமாக ஓடிய காளைக்கு முதல் பரிசாக ரூ.35 ஆயிரத்தை வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வேலழகன் வழங்கினார். அதேபோல் வேகமாக ஓடிய காளைகளுக்கு 35 பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒடுகத்தூரை அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. அதில் குடியாத்தம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, பள்ளிகொண்டா, வேலூர் ஆகிய ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 189 காளைகள் போட்டியில் பங்கேற்றன. கால்நடை டாக்டர் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனைக்கு பின் காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.

முன்னதாக காளை விடும் திருவிழா உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து, போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காளைகள் ஓடும் வீதியில் இரு பக்கமும் பார்வையாளர்களுக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஓடு பாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது காளைகள் முட்டி பார்வையாளர்கள் 26 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கைலாஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காளை விடும் திருவிழாவில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்