மீண்டும் பயோமெட்ரிக் முறை: சர்வர் கோளாறால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் - பொதுமக்கள் அவதி

ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. சர்வர் கோளாறால் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2021-01-19 14:25 GMT
வேலூர்,

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் சென்று ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சர்வர் பிரச்சினை காரணமாக கைரேகை பதிவு செய்து பொருட்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தமிழகம் முழுவதும் பல்வேறு ரேஷன் கடைகளில் இருந்து புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு பொதுமக்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தாமல் பழைய நடைமுறையிலே குடும்ப அட்டையை ஸ்கேன் செய்து வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் வேலூரில் நேற்று திடீரென சர்வர் கோளாறு ஏற்பட்டது. பகல் 12.30 மணி வரை பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பலர் காத்திருந்தனர். பொருட்கள் வாங்க முடியாமல் சிலர் வீட்டுக்கு சென்றனர். பல கடைகளில் மதியம் 1 மணி வரை இந்த பிரச்சினை இருந்தது.

இதுகுறித்து பொதுவினியோகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பழைய முறையில் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மீண்டும் பயோமெட்ரிக் முறை இன்று (நேற்று) கொண்டு வரப்பட்டது. ஆனால் திடீரென சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதனால் மதியம்12.30 மணியளவில் பல கடைகளில் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. சில கடைகளில் பிற்பகலில் சில நிமிடங்கள் இந்தப் பிரச்சினை இருந்தது. இது குறித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த சர்வர் பிரச்சினை இருப்பதாகவும், அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டமும் இணைய ரீதியாக ஆயத்தப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதால் இப்பிரச்சினை எழுந்திருக்கலாம் என தெரிவித்தனர் வேலூர் மாவட்டத்தில் பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்