அமராவதி வனப்பகுதியில் உள்ள கூட்டாற்றில் வெள்ளம்: பரிசல்மூலம் ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள் - உயர்மட்ட பாலம் அமைத்து தர கோரிக்கை
அமராவதி வனப்பகுதியில் உள்ள கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மலைவாழ்மக்கள் மரத்தில் கயிறு கட்டி பரிசல் மூலமாக ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். எனவே கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்வதற்கு முடியாமல் மலைவாழ் மக்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதைத்தொடர்ந்து மழைக்காலங்களில் மலைவாழ் மக்கள் மாற்று வழிப்பாதையாக கேரள மாநிலத்திற்கு உட்பட்ட சம்பகாட்டு பகுதியில் உள்ள காட்டுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த பாதையையும் கேரளா வனத்துறையினர் முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது திடீரென அடைத்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் மலைவாழ் மக்கள் பருவமழை காலங்களில் கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றபோது சமவெளிப்பகுதிக்கு சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அதுமட்டுமின்றி சம்பக்காட்டு வழிப்பாதையின் குறுக்காக ஓடுகின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் தனித்தீவாக மாறியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமதளபரப்புக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து கூட்டாற்றின் குறுக்காக மலைவாழ்மக்கள் இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ள மரத்தில் கயிறு கட்டி அதை பிடித்தவாறு பரிசல் மூலமாக ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் ஆற்றை கடந்து செல்லும்போது இன்னல்கள் ஏற்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் திடீரென வெள்ளத்தின் போக்கு அதிகரித்தால் பரிசல் நிலைதடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மலைவாழ்மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ்மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.