தாளவாடியில் தமிழ் பெயர் பலகை சேதம்: வாட்டாள் நாகராஜை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
தாளவாடியில் தமிழ் பெயர் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
தாளவாடி
தமிழக, கர்நாடக எல்லையில் தாளவாடி அருகே உள்ள ராமபுரத்தில் நெடுஞ்சாலை துறையினர் தமிழ் எல்லை அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். கடந்த 10-ந் தேதி இந்த பெயர் ்பலகையை கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடைத்து சேதப்படுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் நில அளவை அலுவலர்கள் ராமபுரத்தில் மாநில எல்லையை அளவீடு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த இடம் கர்நாடக எல்லைக்குள் இருப்பது தெரிய வந்தது. எனினும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்ததாக வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேர் மீது தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பைனாப்புரம் அருகே எத்திக்குட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பெயர் பலகையை வாட்டாள் கட்சியினர் சேதபடுத்தினார்கள். இதனால் வாட்டாள் நாகராஜை கைது செய்யக்கோரி நேற்று தாளவாடி பஸ்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தைவள்ளுவன் தலைமை தாங்கினார். 'வாட்டாள் நாகராஜை கைது செய்து வேண்டும், சேதப்படுத்திய பெயர்பலகையை மீண்டும் சரிசெய்து அதே இடத்தில் வைக்கவேண்டும்' என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.