சபரிமலை கோவில் மண்டல, மகரவிளக்கு சீசன் நாளை நிறைவடைகிறத
சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் நாளையுடன் நிறைவடைகிறது. இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் களபாபிஷேகம் நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்ற களபாபிஷேகத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பிரதீப்குமார் வர்மா, சுரேஷ் வர்மா ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மன்னர் குடும்ப பிரதிநிதிகள், வழக்கமான பாரம்பரிய முறைப்படி, தந்திரி, மேல்சாந்தி, கீழ்சாந்திகள் ஆகியோருக்கு பண முடிப்புகளை வழங்கினர்.
இன்று (செவ்வாய்க்கிழமை)கோவிலில் நெய்யபிஷேகம் நடைபெறாது. பக்தர்கள் இன்று வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு மண்டல மகர விளக்கு பூஜைகளின் நிறைவாக இன்று இரவு மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி சமர்ப்பன சடங்கு நடைபெறும். அதில் பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெறும். 6 மணிக்கு பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் சாமி தரிசனம் செய்த பிறகு நடை அடைக்கப்படும். அப்போது சன்னிதானத்தில் மற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர் அய்யப்பன் கோவில் கருவறையின் சாவி முறைப்படி மன்னர் குடும்ப பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். அதனை மீண்டும் கோவில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி பெற்றுக் கொள்வார்.
அதை தொடர்ந்து ராஜ குடும்ப பிரதிநிதிகளின் தலைமையில் சன்னிதானத்தில் இருந்து திருவாபரணங்கள் தாங்கிய பேழையுடன் ஊர்வலம் பந்தளம் நோக்கி புறப்படும். அத்துடன் 2020-2021 மண்டல மகர விளக்கு சீசன் நிறைவு பெறும்.
மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.