நாமக்கல் மாவட்டம் முழுவதும் 346 பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டது

9 மாதங்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 346 பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

Update: 2021-01-19 03:25 GMT
நாமக்கல், 

கொரோனா தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இதையொட்டி நேற்று அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 346 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் நேற்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

கிருமிநாசினி தெளிக்கும் பணி

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இதற்கிடையே மாணவ, மாணவிகளுக்கு தினசரி நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த மாத்திரைகளை முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் நேற்று அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 346 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 45 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி வழங்க 9 லட்சம் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தினசரி காலையில் இந்த மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர அனைத்து பள்ளிகளிலும் பெஞ்ச், மேஜை, கரும்பலகை உள்பட வகுப்பறை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தினசரி மாலை நேரங்களில் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

உடல் வெப்பநிலை பரிசோதனை

அனைத்து பள்ளிகளிலும் சோப்பு மற்றும் சானிடைசர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தினசரி காலையில் மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளோம். மாணவ, மாணவிகளின் வசதிக்காக மாவட்டத்தில் உள்ள 43 விடுதிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியம், பள்ளி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்