திருச்சி அருகே சிறுகனூரில் தி.மு.க. மாநில மாநாடு நடைபெறும் இடத்தை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்

திருச்சி அருகே சிறுகனூரில் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.

Update: 2021-01-19 02:08 GMT
திருச்சி, 

தி.மு.க.வின் 11-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ.தொலைவில் சிறுகனூர் என்ற இடத்தில் இதற்காக சுமார் 300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுத்தப்படுத்தும் பணி

அந்த இடத்தில் புதர் மண்டி போய் இருப்பதால் அவற்றை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே. என். நேரு எம்.எல்.ஏ. இந்த பணியை தொடங்கி வைத்தார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விராலிமலை செல்லும் வழியில் இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் சிறுகனூருக்கு வந்து மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய இருக்கிறார்.

திருச்சியில் ஏற்கனவே கடந்த 1996, 2006 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்று உள்ளது. அதனை தொடர்ந்து மீண்டும் தற்போது திருச்சியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு கட்சியினர் தீவிரமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்