தட்டாஞ்சாவடி தொகுதியிலேயே புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்ட வேண்டும் வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தட்டாஞ்சாவடி தொகுதியிலேயே புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்டவேண்டும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-01-19 01:29 GMT
புதுச்சேரி,

தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் தற்போது சட்டமன்றம் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் உறுப்பினர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. ஆண்டுதோறும் பராமரிப்புக்காகவே பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டு வருகிறது. இடப்பற்றாக்குறை உள்ளதால் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

மேலும் புதுவை நகரின் மையத்தை கடந்துதான் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நகரத்திற்கு அப்பால் இருந்து வரும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கு நகரை அடைவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ, அதைவிட கூடுதல் நேரம் சட்டமன்றத்துக்கு செல்ல எடுத்துக்கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளது.

இதை கருத்தில்கொண்டே கடந்த கால ஆட்சியில் எனது தட்டாஞ்சாவடி தொகுதியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக இருசாலைகள் கொண்ட பகுதியில் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. புதிய சட்டமன்றம் கட்டும் திட்டம் பொலிவுறு நகர திட்டத்திலும் (ஸ்மார்ட் சிட்டி) சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் நாடாளுமன்றத்தின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கு நிதி தரவும் முன்வந்துள்ளது.

ஆனால் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு செய்து முடிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முதலில் அந்த திட்டத்தை காங்கிரஸ் அரசும் மேற் கொள்ளவிருப்பதாக அறிவித்தது. இதனால் எனது தொகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கட்டிடம் அமையும். எம்.எல்.ஏ.க்களும் போக்கு வரத்து நெரிசல் இன்றி சட்டமன்றத்துக்கு வந்து செல்ல முடியும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன்.

இந்தநிலையில் புதிய சட்டமன்றம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பல குழுக்களாக பிரிந்து கிடக்கும் அமைச்சர்கள் இவ் வி‌‌ஷயத்தில் ஒன்றாக அமைச்சரவையில் முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இது துரதிர்‌‌ஷ்டவசமானது. எனவே அரசு இந்த முடிவை கைவிட்டு நாடாளுமன்றத்திடம் இருந்து நிதியைப்பெற்று ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சட்டமன்றத்தை கட்டினால் அது நகரின் நுழைவுப்பகுதியாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகளை நிச்சயம் கவரும்.

மேலும் அந்த இடத்தைவிட்டால் புதுவையில் புதிய சட்டமன்றம் கட்ட வேறு இடங்களும் இல்லை. எனவே தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய சட்டமன்றத்தை கட்டவேண்டும். எக்காரணத்தை கொண்டும் சட்டமன்றம் கட்ட அரசு ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பி கொடுப்பதும், சட்டமன்றம் கட்டும் இடத்தை மாற்றுவதும் சரியாக இருக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்