ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் 62 பேர் கைது
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்,
புதுவை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. காலம் கடந்து பெய்த மழையால் புதுவை, காரைக்கால் பகுதியில் பலத்த சேதம் அடைந்தது. நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதையடுத்து மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்யவேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 62 பேரை, திருமலை ராயன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.