ஆண் குழந்தையை தூக்கி கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் போலீசில் கணவர் புகார்

5 வயது ஆண் குழந்தையை தூக்கி கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தருமாறு போலீசில் கணவர் புகார் அளித்து உள்ளார்.

Update: 2021-01-19 00:43 GMT
மும்பை, 

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பெண்ணின் கணவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணின் கணவர் ஷீரடியில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்று உள்ளார். வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு சென்று உள்ளார்.

இந்தநிலையில் மறுநாள் அவர் திரும்பி வந்த போது பெண் குழந்தைகள் 3 பேர் மட்டும் வீட்டில் இருந்தனர். மனைவி, 5 வயது ஆண் குழந்தை இல்லாததை பற்றி தனது பெண் குழந்தைகளிடம் கேட்டார்.

அப்போது தாய், தம்பியுடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிவரவில்லை என சோகத்துடன் கூறினர். அவர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்ததில் மனைவி கல்யாண் பகுதியை சேர்ந்த கள்ளக்காதலனுடன் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மனைவியை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கள்ளக்காதலுடன் சென்ற மனைவியை மீட்டு தருமாறு அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பெண் பிள்ளைகள் மற்றும் கணவனை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்