கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் மீண்டும் தொடக்கம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

Update: 2021-01-19 00:37 GMT
மும்பை, 

மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் கோ-வின் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபோ நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சுகாதாரப்பணியாளர்களிடம் இருந்து புகார்கள் வந்து உள்ளன. ஆனால் அதில் எதுவும் பெரிய அளவிலான தன்மை கொண்ட புகார்கள் இல்லை. நாங்கள் தற்போது உள்ள சூழ்நிலையை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பிறகு தான் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். கோ-வின் செயலியை பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால், அதை பயன்படுத்தாமல் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். மத்திய அரசின் பதிலுக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் சஞ்சய் குமார், முதல்-மந்திரியின் முதன்மை ஆலோசகர் அஜய் மேத்தா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தொடங்கப்படும். வாரத்தில் 4 நாட்கள் 285 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்