உலக நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் பெயரை சரளமாக சொல்லும் 6 வயது சிறுவன் பொதுமக்கள் பாராட்டு
சித்ரதுர்காவில் உலக நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் பெயரை சரளமாக சொல்லும் 6 வயது சிறுவனின் திறமையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா தாலுகா நரேனஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. விவசாயி. இவரது மனைவி அனுமக்கா. இந்த தம்பதிக்கு சந்தன்(வயது 6) என்ற மகன் உள்ளான். இந்த ஆண்டு(2021) 1-ம் வகுப்பு படிக்க வேண்டியவன். ஆனால் கொேரானா பரவலால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு கிடந்ததால் சந்தனை, அவனது பெற்றோர் பள்ளிகூடத்தில் சேர்க்காமல் இருந்து வருகின்றனர். ஆனால் பள்ளிக்கூடத்திற்கு செல்லாவிட்டாலும் சந்தனின் அறிவாற்றலும், ஞாபக சக்தியும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதற்கு காரணம் சந்தன் உலக நாடுகளின் பெயர், இந்தியாவில் உள்ள மாநிலங்கள், கர்நாடகத்தின் மாவட்டம், தாலுகாக்களின் பெயர்களை சிறிதும் தட்டுதடுமாறாமல் பிழையின்றி கூறுவதே.
கொரோனா பரவலால் பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால் அந்த வேளையில் கூட சிறுவன் சந்தன் தனது வீட்டில் ெதாலைக்காட்சியில் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனலை பார்த்து ஆங்கிலம் கற்று வந்துள்ளான். மேலும் அவனது தந்தையும் தன்னால் முடிந்த ஆங்கில வார்த்தையை கற்று கொடுத்துள்ளார். இதனால் சந்தன் வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்றுள்ளான்.
இத்தகைய திறமையைகொண்ட 6 வயது சிறுவன் சந்தனை, பத்திரிகை நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது சிறுவன் சந்தன், நிருபர்களிடம் ஆங்கிலத்திலேயே பேசியது குறிப்பிடத்தக்கது. சந்தன் உலக நாடுகளின் பெயர்களையும் கூறுவது, ஆங்கிலத்தில் பேசுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
சந்தனின் பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் சந்தனும் தனது பெற்றோருடன் சேர்ந்து விவசாயம் செய்தும் வருகின்றான். 6 வயதில் இத்தகைய திறமைகளை கொண்ட சிறுவன் சந்தனை அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன், வியப்புடன் பார்க்கின்றனர். மேலும் அவனை பாராட்டியும் வருகிறார்கள்.
இதுபற்றி சந்தனின் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தங்கள் மகன் சந்தனை பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. ஆனாலும் அவன் உலக நாடுகள் பெயரை நினைவாற்றலுடன் கூறுவது, ஆங்கிலத்தில் பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எங்களுக்கு விவசாயத்திலும் உதவி செய்து வருகிறான். எங்களால் அவனுக்கு தரமாக கல்வி கொடுக்க இயலாது. எனவே திறமைமிக்க எங்கள் மகன் சந்தனுக்கு தரமான கல்விகிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும் என்றனர்.