அராஜகத்தை கடைபிடிப்பவர்களை அடியோடு ஒழிப்போம்: புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

அராஜகத்தை கடைபிடிப்பவர்களை அடியோடு ஒழிப்போம் என்று நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.

Update: 2021-01-10 05:04 GMT
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
புதுவையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெறக்கோரி நடைபெறும் 2-வது நாள் போராட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பாக கவர்னர் கிரண்பெடிக்கு எந்த கோப்பினை அனுப்பினாலும் கேள்வி கேட்டு திருப்பி அனுப்புகிறார். இதுதொடர்பாக டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட்டோம். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. அப்போது நிதித்துறை மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி கவர்னர் கிரண்பெடியை அழைத்து பேசினார். அப்போது விதிமுறைப்படி செயல்பட அறிவுறுத்தினார். ஆனால் அதையும் கேட்கவில்லை.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த நேரத்தில் நடந்த முதல்-அமைச்சர்கள் மாநாட்டுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது பிரதமர் என்னை தனியாக அழைத்து பேசினார். அப்போது 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் அங்கீகாரம் அளிக்க கேட்டுக்கொண்டார். ஆனால் அது சபாநாயகரின் முடிவு என்று நான் கூறிவிட்டேன்.

பாரதீய ஜனதாவும்...
அப்போது அங்கு வந்த உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங் பிரதமரிடம், கவர்னர் கிரண்பெடி தொல்லை கொடுப்பது தொடர்பாக என்னிடம் பலமுறை முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்துள்ளார். கவர்னரை மாற்றவேண்டும் என்றார். ஆனால் பிரதமர் அதை ஏற்கவில்லை. அவர் பாரதீய ஜனதாவை புதுவையில் வளர்க்க கவர்னரை நியமித்துள்ளார்.

இவரால் புதுவையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவரை நாம் மட்டும் புதுச்சேரியை விட்டு போகவேண்டும் என்று கூறவில்லை. பாரதீய ஜனதா கட்சியினரும் திரும்பப்போக சொல்கிறார்கள். இதுதான் இந்த அம்மாவின் லட்சணம்.

நிலம், சட்டம் ஒழுங்கு போன்றவை எல்லாம் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதிகாரம் தொடர்பான வழக்கில் கோர்ட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுப்படி கவர்னர் செயல்பட வேண்டும் என்று கூறியது. கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது, கொள்கை சார்ந்த வி‌‌ஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அதனை மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்று கோர்ட்டு கூறியது.

மண்டைக்கனம்
ஆனால் அதையே சாக்காக வைத்துக்கொண்டு அனைத்து கோப்புகளையும் மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறார். அவர் உள்துறை மந்திரியையும் மதிப்பதில்லை. அவர் மண்டை கனத்தோடு செயல்படுகிறார். நாம் போராடினாலும் அவருக்கு கவலையில்லை. அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதில்லை. கீழே வந்தால் கொரோனா பிடித்துக்கொள்ளுமாம்.

அவர் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். அவருக்கு ஈகோ, திமிரு, அதிகாரபோதை மண்டைக்கனம் ஏறிவிட்டது. உங்களுக்கு நாங்கள் அடிமை இல்லை. உங்களை தூக்கி எறிய தயங்கமாட்டோம். நாங்களாவது அவரை எதிர்க்கிறோம். மற்றவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடியிருப்பார்கள். மனிதன் என்றால் மற்றவர்களை மதிக்க வேண்டும்.

அதிக அமைச்சரவை கூட்டங்களை நடத்தியது நாங்கள்தான். அமைச்சரவையின் 51 முடிவுகளை கவர்னர் நிறைவேற்ற முடியாமல் தடுத்து வைத்துள்ளார். இதனால் மக்களுக்குத்தான் க‌‌ஷ்டம். மக்களுக்கு எதையும் செய்யக்கூடாது என்று கவர்னரும், சில அதிகாரிகளும் சத்தியம் செய்துகொண்டு வந்துள்ளனர்.

சர்வாதிகாரிபோல்...
புதுவை அமைச்சர்களுக்கு ரூ.100-க்குகூட நிதி அதிகாரம் இல்லாத நிலையை உருவாக்கி உள்ளார். அவர் சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். நிதி அதிகாரம் இல்லாததால் நம்மால் வேகமாக செயல்பட முடியவில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சமுகம், கவர்னர் கிரண்பெடியும் புதுவை வளரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால் அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் இருப்பதற்கு கவர்னர் கிரண்பெடிதான் காரணம்.

இதையெல்லாம் எதிர்த்து நாம் ஏன் போராடக்கூடாது? இந்த போராட்டத்தினால் எந்த விளைவு வந்தாலும் சந்திக்க தயார். அதேபோல் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற ஏப்ரல் மாதமே கோப்பு அனுப்பினோம். ஆனால் அதையும் 2 மாதம் தனது அலுவலகத்திலேயே வைத்திருந்து காலதாமதம் செய்தனர்.

தி.மு.க. ஆதரவு
சனிப்பெயர்ச்சி விழா, புத்தாண்டு கொண்டாட்டம் என அனைத்திலும் தலையிட்டார். அதையெல்லாம் சனி பகவான் பார்த்துக்கொண்டுதான் உள்ளார். புயல் சேத நிவாரணமாக புதுவைக்கு ரூ.400 கோடி நாம் மத்திய அரசிடம் கேட்டால் கவர்னர் கிரண்பெடி ரூ.10 கோடி போதும் என்று கூறுகிறார். அனைவருக்கும் கொடுமை செய்யும் இவர் கவர்னராக இருக்கவேண்டுமா?

நாங்கள் தாமதமாக போராட்டம் நடத்துவதாக சிலர் முகநூலில் பதிவிடுகிறார்கள். நாங்கள் கடந்த 2019-ம் ஆண்டே கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டதை நிறைவேற்றாததால் இப்போது போராட்டம் நடத்துகிறோம். இதற்காக 5 குழுக்களாக சென்று மக்களை சந்தித்தோம். அவர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் ஆதரவினையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அடியோடு ஒழிப்போம்
கவர்னர் மாளிகை உள்ளே ஏன் நுழையக்கூடாது? என்று சிலர் கேட்கிறார்கள். நாம் போராட்டம் நடத்துவது காந்திய வழியில். அராஜகத்தின் மீது நம்பிக்கையில்லை. அதனிடமிருந்து மக்களை எங்கள் உயிரை கொடுத்தாவது காப்போம்.

காலையில் காவல்துறை தலைவரிடம் பேசினேன். அப்போது கவர்னருக்கு 100 அடுக்கு பாதுகாப்பு வேண்டுமானாலும் கொடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் மக்கள் சட்டமன்றம், தபால்நிலையம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதை தடுத்து நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளேன். மக்களோடு மக்களாக நாங்கள் உள்ளோம். அராஜகத்தை கடைபிடிப்பவர்களை அடியோடு ஒழிப்போம்.

இதைப்போல் இன்னும் பல போராட்டங்களை நடத்த உள்ளோம். கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்