சுங்கச்சாவடி கட்டணத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு விலக்கு; மத்திய மந்திரிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து கடிதம்
சுங்கச்சாவடி கட்டணத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று மத்திய மந்திரிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து கடிதம் அனுப்பி உள்ளார்.
மத்திய சாலைப்போக்குவரத்து மந்திரி நிதின்கட்கரிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பாஸ்டேக் முறை
அடுத்த (பிப்ரவரி) மாதம் 15-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை மட்டுமே அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவதில் இருந்து மக்கள் பிரதிநிதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமானது பூகோள அடிப்படையில் 4 பிராந்தியங்களை உள்ளடக்கியது. அதன் தலைநகர் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் என்ற பிராந்தியம் 138 கி.மீ. தொலைவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மாகி பிராந்தியம் 640 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் கண்ணனூர் மாவட்டங்களின் இடைப்பட்ட பகுதியிலும், ஏனாம் பிராந்தியம் 830 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவிற்கு அருகிலும் அமைந்துள்ளன.
விலக்கு அளிக்கவேண்டும்
அரசு அலுவல் காரணமாக மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் இந்த பிராந்தியங்களுக்கு செல்ல அடிக்கடி வேண்டியிருக்கும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு செல்லும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் சென்னை வரை சாலையில் சென்று அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்ல வேண்டியுள்ளது.
அப்போது பல சுங்கச்சாவடிகளை கடக்க பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே புதுச்சேரியின் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அதற்கான ஆணையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.