வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் வேதாரண்யத்தில் இருந்து தொடங்கியது

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேதாரண்யத்தில் இருந்து விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் தொடங்கியது.

Update: 2021-01-10 03:18 GMT
வேதாரண்யம்,

விவசாயிகளின் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை ராஜராஜ சோழன் சிலை நோக்கி விவசாயிகள் நீதிகேட்டு ெநடும் பயணம் தமிழக காவிரி விவசாய சங்க பொதுச்ெசயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று தொடங்கியது.

துண்டு பிரசுரம்

வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து விவசாயிகள் நீதிகேட்டு நெடும் பயணத்தை மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு ராஜாஜி பூங்காவில் இருந்து வேதாரண்யம் மேலவீதி, வடக்கு வீதி சென்று சுதந்திரப் போராட்ட தியாகியான சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பிரசார பயணம் தஞ்சையை நோக்கி புறப்பட்டது. இதில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

பேட்டி

பின்னர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களை போல தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமர் மோடி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரசார பயணத்தில் தமிழக காவிரி விவசாய சங்க மாநில கவுரவ தலைவர் பாலசுப்ரமணியன், மாநில துணை செயலாளர் செந்தில்குமார், தஞ்சை மண்டல தலைவர் அண்ணாதுரை, மாநில துணை செயலாளர் வரதராஜன், மாநில தலைவர் புண்ணிய மூர்த்தி, தமிழக மலைவாழ் விவசாய சங்க பொதுச்செயலாளர் ராமர், தர்மபுரி மாவட்ட தலைவர் சின்னசாமி, மதுரை மாவட்ட செயலாளர் அருண், வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் கருணை நாதன், செய்தி தொடர்பாளர் அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்