உப்பிலியபுரத்தில் தொடர் மழை எதிரொலி: 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய வெங்கடாசலபுரம் ஏரி

உப்பிலியபுரத்தில்தொடர் மழை பெய்துவருவதை அடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு வெங்கடாசலபுரம் ஏரி நிரம்பியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-01-10 02:59 GMT
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, உப்பிலியபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. கொல்லிமலை, புளியஞ்சோலை அய்யாற்றை நீராதாரமாக கொண்ட வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரி, ஆலத்துடையான்பட்டி பெரிய ஏரி, சின்னஏரி, சிறுநாவலூர் ஏரி, பி.மேட்டூர் பாப்பான் குட்டை ஏரி, ரெட்டியாப்பட்டி ஏரி ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்தநிலையில் ஜம்பேரியை நீராதாரமாக கொண்ட வெங்கடாசலபுரம் ஏரிக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி மறுகால்பாய்ந்தது.

ஒக்கரை ஏரிக்கு நீராதாரமாக வெங்கடாசலபுரம் ஏரி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர். இந்த ஏரியின் தண்ணீர் உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், சோபனபுரம் ஆகிய ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், இப்பகுதி நிலத்தடி நீர் மட்ட உயர்விற்கு காரணமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்