கறம்பக்குடி அருகே 2 பேரை கட்டிப்போட்டு நகை அடகு கடையில் கொள்ளை முயற்சி

கறம்பக்குடி அருகே 2 பேரை கட்டிப்போட்டு நகை அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-01-10 00:40 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள துவார் கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே கல்லுரணி கிராமத்தை் சேர்ந்த அருள் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 40) என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முருகன், நகை அடகு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அந்த வணிக வளாகத்தில் ஓட்டல் நடத்தி வரும் ஓட்டல் உரிமையாளர் சின்னையா (50) மற்றும் லெட்சுமணன் (45) ஆகியோர் ஓட்டல் முன்பு தூங்கி கொண்டிருந்தனர்.

கொள்ளை அடிக்க முயற்சி

இந்நிலையில் இரவு சுமார் 2 மணி அளவில் நகை அடகு கடை முன்பு மனித நடமாட்ட சத்தம் கேட்கவே கடை முன்பு படுத்திருந்த சின்னையா, லெட்சுமணன் ஆகியோர் கண்விழித்தனர். அப்போது 7-க்கும் மேற்பட்டோர் நகை அடகு கடையின் சுவற்றில் துளை போட முயன்றனர். இதை கண்ட சின்னையா, லெட்சுமணன் ஆகியோர் சத்தம் போட முயன்றபோது அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் 2 பேரையும் தாக்கி, வாயை பொத்தி கட்டி போட்டனர். பின்னர் அடகு கடை இரும்பு கேட்டை உடைத்து திறக்க முயன்றபோது அலாரம் ஒலித்தது.

இதை கேட்டு அருகில் உள்ள கடைக்காரர்கள், அப்பகுதி பொதுமக்கள் கடைக்கு ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம கும்பல், கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பொதுமக்கள் விரட்டி சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

இது குறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர். புதுக்கோட்டையில் இருந்து தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இச்சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலாரம் ஒலித்ததால் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை போகமல் தப்பின. மேலும் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்