அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை
அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
திருப்பூர்,
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனால் இதற்கான ஒத்திகை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக இந்த மருந்தை கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகைகளும் சென்னை உள்பட சில மாவட்டங்களில் நடைபெற்றுவிட்டன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 5 இடங்களில் நடைபெற்றது.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை, பொங்கலூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூர் டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சரண் தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு மருத்துவமனைக்கு 25 பேர் வீதம் 125 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படுவது போல் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நடந்த ஒத்திகையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். கொரோனா தடுப்பூசி போட வருகிறவர்கள் முதலில் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வைக்கப்படுகிறார்கள். தொடர்ந்து அவர்களது பெயர், முகவரி பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் டாக்டர்கள் அறைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு பரிசோதனை செய்யப்படுகிறார்கள். இதற்கு அடுத்ததாக அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அறையில் ஊசி போடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அதற்கு அடுத்ததாக கண்காணிப்பு அறையில் அவர்கள் 30 நிமிடம் இருப்பது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையின் சார்பில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி திட்ட மேலாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல் தலைமையில் டாக்டர் சாம்பால், சுகாதார ஆய்வாளர் கந்தசாமி மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் செய்திருந்தனர்.