கடலூரில் பயங்கரம்: மூதாட்டி அடித்துக் கொலை - நகைகள், பொங்கல் பரிசு தொகுப்பை கொள்ளையடித்த கும்பலுக்கு வலைவீச்சு
கடலூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு பெண்ணையும் தாக்கிவிட்டு நகைகள், பொங்கல் பரிசு தொகுப்பை கொள்ளையடித்துச்சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-;
கடலூர்,
கடலூர் பாதிரிக்குப்பம் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருடைய மனைவி பச்சையம்மாள் (வயது 65) . இவர்களுக்கு சாந்தி, லட்சுமி என்ற 2 மகள்கள் உள்ளனர். திருமணமான இவர்கள் இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பச்சையப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் தனியாக வசித்து வந்த பச்சையம்மாளுடன், கடந்த சில மாதங்களாக பச்சையப்பனின் அக்காளான தாயாரம்மாளும் (70) வசித்து வந்தார். இவர்கள் இருவரும் பச்சையம்மாளின் மகள்கள் சாந்தி, லட்சுமி ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் பச்சையம்மாளின் பேரன்கள் சரண்ராஜ் (17) , ஆகாஷ் (15) ஆகியோர் சாப்பாடு கொடுப்பதற்காக பச்சையம்மாள் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு பச்சையம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் தாயாரம்மாள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாயாரம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த பச்சையம்மாள் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது தலை மற்றும் முகத்தில் இரும்பு கம்பியால் தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. மேலும் அவர்கள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகளையும் காணவில்லை.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மூதாட்டிகள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் பச்சையம்மாள், தாயாரம்மாள் ஆகியோரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு, அவர்கள் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றிருக்கலாம் என்றும், அவர்கள் தாக்கியதில் தான் பச்சையம்மாள் இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
மேலும் பச்சையம்மாள் வாங்கி வைத்திருந்த பொங்கல் பரிசு தொகுப்பு 2,500 ரூபாய் ரொக்கத்தையும் காணவில்லை. அதனையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் நகைகளை திருடும் நோக்கில் பச்சையம்மாள் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய் புருனோ அழைத்து வரப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கொலை நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயாரம்மாளையும் பார்வையிட்டார். மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.